ரயில் டிக்கெட் முன்பதிவில் IRCTC கொண்டு வந்துள்ள மாற்றங்கள் என்ன? முழு விவரம்!

05:00 PM Sep 23, 2025 | புதுவை புதல்வன்

ரயில் டிக்கெட் முன்பதிவில் முக்கிய மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி). இந்த மாற்றம் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தங்களின் நீண்ட தூர பயணத்துக்கு ரயில் பயணத்தை தெரிவு செய்வது வழக்கமாக உள்ளது. விரைவு ரயில் உட்பட பெரும்பாலான ரயில் பயணங்கள் பட்ஜெட்டுக்குள் அடங்குவதாலும், பயண சவுகரியம் உள்ளிட்ட காரணங்களாலும் மக்களின் தேர்வாக இது அமைந்துள்ளது. பெரும்பாலான பயணிகள் தங்கள் பயணத்தை முறையாக திட்டமிட்டு ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்வதுண்டு. 

இருப்பினும், சமயங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவில் மக்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வதும் உண்டு. குறிப்பாக டிராவல் ஏஜெண்டுகள் ரயில் டிக்கெட்டை மொத்தமாக பதிவு செய்வதாக குற்றச்சாட்டு உண்டு.

இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் 1 முதல் முன்பதிவுக்கான காலவரம்பு மாற்றப்பட்டது. அதற்கு முன்பு வரை பயண தேதியில் இருந்து 120 நாட்களுக்கு முன்னதாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் சூழல் இருந்தது. அதேநேரத்தில், 120 நாட்கள் முன்பதிவு காலவரம்பின் கீழ் பதிவு செய்பவர்களில் 21 சதவீதம் பேர் பயணத்தை ரத்து செய்வதாகவும், 5 சதவீதம் பேர் பயணிப்பது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் ரயிலில் பயணிக்க விரும்பியும் டிக்கெட் கிடைக்காமல் போன பயணிகளை கருத்தில் கொண்டு,

2024-ல் 120 நாட்கள் என இருந்த முன்பதிவு காலவரம்பை 60 நாட்களாக மாற்றப்பட்டது. தற்போது இந்த 60 நாட்கள் முன்பதிவு காலவரம்பின் கீழ் ஐஆர்சிடிசி இணையதளம், செயலி மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்டரிலும் ரயில் டிக்கெட் பதிவு செய்யலாம். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய பயனராக பதிவு செய்திருப்பது அவசியம்.

தட்கல் முறையிலும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஏசி பெட்டிகளுக்கான தட்கல் டிக்கெட் காலை 10 மணி அளவிலும், ஏசி அல்லாத பெட்டிகளுக்கான தட்கல் டிக்கெட் காலை 11 மணி அளவிலும் முன்பதிவு செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது. இந்நிலையில், கடந்த ஜூலையில் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது 60 நாட்கள் காலவரம்புக்கு உட்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிலும் சில மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது ஐஆர்சிடிசி. 

ரயில் டிக்கெட் முன்பதிவில் வந்துள்ள புதிய மாற்றங்கள் என்ன?

பொதுவாக பண்டிகை காலங்கள் உட்பட விரைவு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியதுமே ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு ஆகிவிடும். இதனால் பாதிப்பு என்னவோ சாமானிய மக்களுக்கு தான். இந்த நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவில் வந்துள்ள புதிய மாற்றங்கள் அறிமுகமாகி உள்ளன. 

இந்த புதிய மாற்றத்தின்படி,

  • ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்களுக்கு ஆதார் எண்ணை, ஐஆர்சிடிசி பயனர் கணக்குடன் லிங்க் செய்த கணக்குகளை கொண்ட பயனர்கள் மட்டுமே முன்பதிவு செய்யப்படும். இந்த நேரத்தில் வேறு யாரும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது.

  • மேலும், அங்கீகரிக்கப்பட்ட டிராவல் ஏஜெண்டுகள் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 10 நிமிடத்துக்கு பிறகு மட்டுமே ரயில் டிக்கெட்டுகளை பெற முடியும். இது பொது மக்களுக்கு பலன் தரும் நடவடிக்கையாக உள்ளது.

  • முன்பதிவு தொடங்கிய 15 நிமிடங்களுக்கு பிறகே ஆதார் எண்ணை, ஐஆர்சிடிசி கணக்குடன் இணைக்காத பயனர்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இது இணையவழியில் ஐஆர்சிடிசி வலைதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். டிக்கெட் கவுன்டரில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நபர்களுக்கு ஆதார் கட்டாயமல்ல. 

இந்த புதிய மாற்றத்தின் மூலம் போலி கணக்குகளை கொண்ட பயனர்கள் மற்றும் டிராவல் ஏஜெண்டுகள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆதார் எண்ணை ஐஆர்சிடிசி கணக்குடன் இணைப்பது எப்படி?

  • ஐஆர்சிடிசி-யில் பயனர் கணக்கு வைத்துள்ள நபர்கள் தங்களது பயனர் விவரங்களை உள்ளிட்டு ஐஆர்சிடிசி வலைதளம் அல்லது செயலியில் லாக்-இன் செய்ய வேண்டும். 

  • பின்னர் ‘My Account’ பகுதிக்கு செல்ல வேண்டும். 

  • அதில் ‘Authenticate User’ என உள்ள பகுதியில் சென்று பெயர், பாலினம் உள்ளிட்டவற்றை ஆதாரில் உள்ள விவரங்களை உள்ளிட்டு அதை ஐஆர்சிடிசி கணக்குடன் லிங்க் செய்ய வேண்டும். 

  • அப்போது ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதை உள்ளிட்டு ஆதாரை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். 

  • ஆதாரில் உள்ள பெயரும், ஐஆர்சிடிசி பயனர் கணக்கு பெயரும் மாறுபட்டு இருந்தால், ஆதார் அட்டையில் இருப்பது போலவே ஐஆர்சிடிசி பயனர் கணக்கு விவரங்களை எடிட் செய்து கொள்ள வேண்டும். 

Edited by Induja Raghunathan