டாடா அறக்கட்டளையில் நடக்கும் பிரச்சனை என்ன? ஒரு விரிவான பார்வை!

06:38 PM Oct 24, 2025 | cyber simman

1892ல் ஜம்சேத்ஜி டாடா தொடங்கிய Tata Trusts; இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற அறக்கட்டளைகளில் ஒன்றாகும். கல்வி, மருத்துவம், கிராமப் பகுதியில் பெண்கள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு சமூக வளர்ச்சி முயற்சிகளை தொடர்ந்து நடத்திவருகிறது. டாடா டிரஸ்ட் மக்களிடையே நன்மதிப்பை பெற்ற அமைப்பாக இருந்துவந்த நிலையில், ரத்தன் டாடாவின் மறைவுக்கு பின்னர் அதில் சில சலசலப்புகள் நிகழ்ந்துள்ளது பல்வேறு செய்திகள் வாயிலாக தெரியவந்துள்ளது.

More News :

இயக்குனர் ஒருவரின் மறு நியமனம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை, இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் உயர் மட்ட நிர்வாக சிக்கலாகி, மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் தலையிடும் அளவுக்கு மாறி ஒட்டு மொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், இந்த பிரச்சனையின் அடிப்படை மற்றும் இதன் மையமான டாடா டிரஸ்ட்ஸ் அறக்கட்டளை, அதன் அறங்காவலர்கள் அமைப்பு பற்றி ஒரு கண்ணோட்டம்.

இயக்குனர் நியமனம் தொடர்பாக அறங்காவலர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே இப்பிரச்சனைக்கு முக்கியக் காரணம் என இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கும் இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது.

இதன் நான்கு அறங்காவலர்கள், டிரஸ்டின் தலைவர் நோயல் டாடாவுக்கு எதிராக உள்ளனர். இந்த பிரச்சனையின் பின்னணியை புரிந்து கொள்ள டாடா டிரஸ்ட்ஸ் மற்றும் அதன் அமைப்பை தெரிந்து கொள்ள வேண்டும்.

டாடா அறக்கட்டளை அமைப்பு

டாடா டிரஸ்ட்ஸ் என்பது, டாடா குழும நிறுவனங்களை நிர்வகிக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தில் 66 சதவீத பங்குகளை கொண்ட அறக்கட்டளை அமைப்பாகும். நாட்டின் நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட இந்த தொழில் குழுமத்தின் லாபம், நன்கொடை, கல்வி, சுகாதார நலன், கிராமப்புற முன்னேற்றம் ஆகியவற்றுக்கு செலவிடப்படுவதை உறுதி செய்ய இந்த அறக்கட்டளை அமைப்பு உண்டாக்கப்பட்டது.

அறங்காவலர்கள்

ரத்தன் டாடா மறைவுக்கு பின், டாடா டிரஸ்ட்ஸ் அறக்கட்டளை தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டார். இந்த அறக்கட்டளை தான் தற்போது இரண்டு முகாம்களாக பிரிந்துள்ளது.

நோயல் டாடா

டிரஸ்டின் தலைவராக இருக்கும் நோயல் டாடா, டிரெட்ண்ட், டாடா இண்டர்நேஷனல் உள்ளிட்ட நிறுவனங்களை வழிநடத்துகிறார். தற்போதைய சர்ச்சையின் மையமாக மாறியிருக்கிறார்.

வேணு ஸ்ரீனிவாசன்

டிரஸ்ட்டின் துணைத்தலைவராக இருக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த நன்கறியப்பட்ட தொழிலதிபராகவும், டிவிஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கிறார். சிறந்த நிர்வாக வழிநடத்தலுக்காக அறியப்படுகிறார்.

விஜய் சிங்

முன்னாள் பாதுகாப்பு செயலாளரான விஜய் சிங், 2013 ம் ஆண்டு முதல் டாடா குழுமத்துடன் தொடர்பு கொண்டுள்ளார். டாடா டிரஸ்ட்ஸில் துணைத்தலைவராக இருந்துள்ளார். செப் 11 ல் இவரது விலகலே பிரச்சனையின் மையம்.

மெஹ்லி மிஸ்ட்ரி

பலோஞ்சி நிறுவனத்தின் இயக்குனரான மிஸ்ட்ரி தான், நோயல் டாடா தரப்பை எதிர்க்கிறார். டாடா குழுமத்திற்கு நெருக்கமான ஷபூர்ஜி பலோஞ்சி குடும்பத்துடன் தொடர்பு உடையவர்.

டரியஸ் கம்பாட்டா

பிரபல வழக்கறினரான கம்பாட்டா, அறக்கட்டளையுடன் நீண்ட கால தொடர்பு கொண்டவர். 2016ல் அறக்கட்டளையில் இருந்து விலகியவர் 2023ல் மீண்டும் நியமிக்கப்பட்டார்.

பிரமீத் ஜாவேரி

சிட்டி பேங்க் இந்தியா முன்னாள் சி.இ.ஓ ஆன ஜாவேரி அறக்கட்டளையின் நிதி வல்லுனராக விளங்குபவர்.

ஜகாங்கீர் எஸ்.ஜகாங்கீர்

டாடா அறக்கட்டளையின் நன்கொடை செயல்பாடுகளுடன் நீண்ட கால தொடர்பு கொண்டவர். இந்த நால்வரும் எதிரணியில் உள்ளனர்.

பிரச்சனையின் மூலம்

தற்போதைய பிரச்சனையின் மையமாக, 30 பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உள்ளிட்ட 400க்கும் மேலான டாடா நிறுவனங்களை நிர்வகிக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தில் இயக்குனரை நியமிப்பது தொடர்பான அதிகார மோதலாக கருதப்படுகிறது.

ரத்தன் டாடா இருந்தவரை டாடா டிரஸ்ட்சில் எந்த பிரச்சனையும் இல்லை. அவரது மறைவுக்குப் பின், நோயல் டாடா தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின், அறக்கட்டளை உறுப்பினர்கள் இடையே நம்பிக்கை குறைவு உண்டாகி, இரு முகாம்களாக பிரியும் நிலை உண்டானதாக கருதப்படுகிறது.

டாடா சன்சில் நியமன இயக்குனராக விஜய் சிங்கை மறு நியமனம் செய்வது தொடர்பாக நடைபெற்ற செப் 11 கூட்டத்தில், இந்த மோதல் வெளிச்சத்திற்கு வந்தது. நோயல் டாடா தரப்பு மற்றும் மெஹ்லி மிஸ்ட்ரி தரப்பு என இரண்டாக பிரிவு ஏற்பட்டதாக என்டிடிவி விளக்க கட்டுரை தெரிவிக்கிறது.

டாசா சன்ஸ் இயக்குனர் குழுவில் இயக்குனராக விஜய் சிங் நியமிக்கப்படுவதை செப் 11 கூட்டம் பரிசீலித்தது. ரத்தன் டாடா மறைவுக்கு பின், இயக்குனர்கள் 75 வயதை கடந்த பின் ஆண்டுதோறும் மறு நியமனம் செய்யப்பட வேண்டும் எனும் விதி கொண்டுவரப்பட்டது. இதன்படி, விஜய் சிங் மறுநியமனத்தை நோயல் டாடா மற்றும் வேணு ஸ்ரீனிவாசன் முன்வைத்தனர். மிஸ்ட்ரி தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மோதல் தீவிரம்

இதையடுத்து, ’மிஸ்ட்ரியை இயக்குனராக நியமிக்க வேண்டும்,’ என எதிர் தரப்பினர் கோரினர். இதை நோயல் டாடா தரப்பு தீர்மானமாக மறுத்தது. மிஸ்ட்ரி தரப்பினர் நோயல் டாடா அதிகாரத்தை மட்டுப்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாகக் கூறப்பட்டு வந்த பின்னணியில் இது நிகழ்ந்தது. இயக்குனர் குழுவில் கூடுதல் அதிகாரத்தை கோரியதோடு, நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை, முறையான தகவல் தொடர்பு உள்ளிட்ட பிரச்சனைகளையும் இந்த தரப்பு எழுப்பியது.

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமத்தில் உயர் மட்ட நிர்வாக சிக்கலை ஏற்படுத்தும் வகையில் இவை அமைந்தன. இதனிடையே, விஜய சிங் ராஜினாமா செய்தார்.

சமரச முயற்சி

டாடா சன்சை வழிநடத்தும் அறக்கட்டளையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை மத்திய அரசின் கவனத்தையும் ஈர்த்தது. மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் தலையிட்டு பேசினர். இந்த பிரச்சனை பெரிதாவது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதால் இதற்கு தீர்வு காண வலியுறுத்தப்பட்டது.

இதனிடையே, டாடா சன்ஸ் தலைவராக மூன்றாவது முறையாக என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது இரண்டாவது பதவிக்காலம் 2027ல் முடிவடையும் நிலையில் குழுமத்தின் திட்டங்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை தொடர்வதற்காக அவருக்கு மூன்றாவது ஐந்தாண்டு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சிக்கல், 2016ல் ரத்தன் டாடா- சைரஸ் மிஸ்ட்ரி இடையில் ஏற்பட்ட பிரச்சனையை நினைவுப்படுத்தினாலும், இம்முறை டாடா சன்சிற்கு எந்த சிக்கலும் இல்லை, என்கின்றனர். எனினும், இயக்குனர் குழு நியமனத்தை கட்டுப்படுத்துவது, முக்கிய முடிவுகள் தொடர்பாக அனுமதி பெறுவது, டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குகளை வெளியிட வைக்கும் ரிசர்வ் வங்கி விதி தொடர்பாக விலக்கு பெறுவது உள்ளிட்ட விஷயங்கள் இந்த பிரச்சனையில் பின்னிப் பிணைந்துள்ளன.


Edited by Induja Raghunathan