+

கர்ப்பிணிப் பெண்கள் ஆடை பிரிவில் ‘Momzcradle’ தொடங்கி பிசினசில் ஜெயித்துக் காட்டிய அபி கல்யாண்!

கர்ப்ப காலத்தில் ஆடை விசயத்தில் தான் சந்தித்த அசௌகரியங்களை மற்றவர்களும் எதிர்கொள்ளக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், ஒன்பது ஆண்டுகள் அது குறித்து ஆய்வு செய்து, Momzcradle என்ற அழகிய பிராண்டாக்கி வெற்றி கண்டுள்ளார் அபி.

பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணிற்குமே மறுபிறவி என்றுதான் சொல்லுவார்கள். காரணம் மற்றொரு உயிரைப் பிரசவிப்பது மட்டுமல்ல; அந்த கர்ப்ப காலத்தில் ஆகட்டும், பிரசவத்திற்குப் பிறகாகட்டும், ஒவ்வொரு பெண்ணுமே உடலளவிலும், மனதளவிலும் பல்வேறு மாற்றங்களைச் சந்திக்கிறார்கள். அதிலும் குறிப்பாக உடல் அமைப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, சரியான ஆடை கிடைக்காமல் அவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள்.

அப்படி தனது பிரசவ காலத்தில் தான் சந்தித்த கசப்பான அனுபவங்களையே, தனது தொழிலுக்கான பாடமாக்கி, ’தொட்டில்’ என்ற பெயரில் கர்ப்பகால உடைகள் தயாரிக்க ஆரம்பித்து, இன்று அதனை ’Momzcradle’ என்ற பிராண்டாக மாற்றி, வெற்றிகரமான தொழில்முனைவோராக வலம் வருகிறார் சென்னையைச் சேர்ந்த 42 வயதாகும் அபி கல்யாண்.

“நான் பி.இ பட்டதாரி. ஆனால் திருமணத்திற்குப் பிறகு வெளியே வேலைக்குச் செல்ல முடியாத சூழல். 2010ம் ஆண்டு நான் கர்ப்பமாக இருந்த சமயத்தில் உடலுக்குப் பொருத்தமாக, சௌகர்யமான உடைகள் கிடைக்காமல் நான் மிகவும் அவதிப்பட்டேன். இப்போது இருப்பது போல், கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு என பிரத்யேகமான உடைகள் அப்போது சந்தையில் இருக்கவில்லை.

அப்போது நான் சந்தித்த அசௌகரியங்கள்தான், ‘நாமே அப்படியான உடைகளைத் தயாரித்து விற்பனை செய்யலாமே என்ற சிந்தனையை எனக்குள் உண்டாக்கியது. தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் இது குறித்து சந்தையில் கொஞ்சம் கொஞ்சமாக ஆராய்ச்சி செய்தேன், என்று தனது தொழில் பயணத்தின் தொடக்கத்தை பகிர்ந்துகொண்டார்.

" align="center">Momzcradle founder Abhi

Momzcradle நிறுவனர் அபி கல்யாண்

அந்த சமயத்தில்தான் எனக்கும், என் கணவருக்கும் இடையே சில காரணங்களால் பிரச்சினை ஏற்பட்டது. என் மகனுடன் வீட்டில் இருந்து நிராதரவாக வெளியேற வேண்டிய சூழல். படித்த படிப்பிற்கான சான்றிதழ்கள் எதுவும் கையில் இல்லை. டூப்ளிகேட்டிற்கு விண்ணப்பித்த போதும், அவை கிடைப்பதற்கு நிறைய மாதங்கள் ஆகும் என்று தெரிந்தது.

"என் மகனை வளர்க்கவும், என்னை பொருளாதார ரீதியாக நிலை நிறுத்திக் கொள்ளவும் அப்போது ஒரு வருமானம் தேவைப்பட்டது. அப்போது, வீட்டில் இருந்தபடியே ஏதாவது செய்யலாம் என நான் யோசித்த சமயத்தில்தான், மெட்டர்னிட்டி வேர் தைத்து விற்பனை செய்யலாம் என்ற ஐடியா உருவானது,” என தான் தொழில்முனைவோராக மாறிய சூழ்நிலையை விவரிக்கிறார் அபி.

கர்ப்பிணி பெண்களின் தொட்டில்

உணவைத் தொடர்ந்து மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் இரண்டாவதாக நிற்பது உடைதான். அதனால்தான், எப்போதுமே ஆடை தொடர்பான தொழில் வாய்ப்புகள் புதிது புதிதாக வளர்ந்து கொண்டே இருக்கின்றன. அதிலும், பெண்களுக்கான உடை தயாரிப்பு என்பது கடல் மாதிரி. ஒரு டெய்லர் அல்லது பிராண்ட் பிடித்து விட்டால், அதை விட்டு மாறவே மாட்டார்கள் பெண்கள்.

“பெண்களுக்கு ஆடை தயாரிப்பது என்பது பெரிய மார்க்கெட். நல்ல கணவர்கள்கூட கிடைத்து விடுவார்கள், ஆனால் நல்ல டெய்லர்கள் கிடைப்பது பெரிய கஷ்டம் என்று நகைச்சுவையாகக் கூறுவார்கள். அதிலும் குறிப்பாக இளம் தாய்மார்களுக்கு உடை தயாரிப்பதில் இருந்த தேவையைப் பற்றி, அப்போது பெரிதாக சிந்திக்கவில்லை என்ற கவலை எனக்கு இருந்தது.

“எனது சொந்த அனுபவத்தில் நான் சந்தித்த அசௌகரியங்களை வைத்து, மெட்டர்னிட்டி ஆடைகள் தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தேன். ஆனால், அப்படி பாலூட்டும் தாய்மார்களுக்கு அது மெட்டர்னிட்டி ஆடை என தனித்துவமாகத் தெரியக்கூடாது,” என நினைத்தேன்.

பொதுவாகவே பிரசவத்திற்குப் பிறகு, பெண்கள் தனிமையை உணர்வார்கள். அந்த நேரத்தில், அவர்களது உடை மிருதுவாகவும், அதே சமயம் நைட்டி மாதிரி இல்லாமல் அவர்களை எப்போதும் புத்துணர்ச்சியுடன் அழகாகக் காட்டுவதாகவும் இருக்க வேண்டும், என திட்டமிட்டேன். அப்படி நான் பார்த்து பார்த்து உருவாக்கியவை, உருவாக்குபவை தான் எங்களது ’மாம்ஸ் கிரேடல்’ உடைகள்.

2019 அக்டோபரில்தான் மாம்ஸ் கிரேடலை நான் ஆரம்பித்தேன். கையில் சுத்தமாக சேமிப்போ, முதலீட்டிற்கு வேறு பணமோ இல்லை. சிங்கிள் மாம் வாழ்க்கை அவ்வளவு எளிதானதல்ல, எனவே,

”கையில் இருந்த சில நகைகளை அடகு வைத்து, ரூ.1.5 லட்சம் முதலீட்டில், ஆன்லைனில்தான் மாம்ஸ் கிரேடலை ஆரம்பித்தேன். இன்ஸ்டாகிராம் பக்கம் ’மாம்ஸ் கிரேடல்’ என இருந்தாலும், அப்போது எனது உடைகளைத் ’தொட்டில்’ என்ற பெயரில்தான் விற்கத் தொடங்கினேன். ஆனால் தொட்டில் என்பது குழந்தைகளுக்கான பொருட்களை மட்டும் விற்பனை செய்யும் கடை என்பது போன்ற தோற்றத்தை தந்ததால், சமீபத்தில்தான் முழுவதுமாக எங்கள் தயாரிப்புகள் அனைத்தையும் மாம்ஸ் கிரேடல் என்ற பிராண்டாக மாற்றினேன்,” என்கிறார் அபி.
thottil abi

கொரோனா சமயத்தில் வளர்ந்த பிராண்ட்

மாம்ஸ் கிரேடலை ஆரம்பித்த சில மாதங்களிலேயே கொரோனா லாக்டவுன் வந்துவிட, ஆரம்பத்தில் சிறிது தடுமாறினாலும், பின்னர் அதுவே தனக்கு சாதகமாக மாறி விட்டதாகக் கூறுகிறார் அபி.

“கொரோனா லாக்டவுன் காலத்தில் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க, அப்போது முன்பைவிட கர்ப்பங்கள் அதிகரித்தது. எனவே, அப்போது எங்கள் உடைகளுக்கான தேவையும் அதிகமானது, எங்களது தொட்டிலின் சர்க்கிளும் அப்போது மேலும் விரிவானது.”

நானே நேரில் போய், கையால் தொட்டுப் பார்த்துத்தான் துணிகளை வாங்குகிறேன். ஒவ்வொரு வாரமும் புதுப்புது டிசைன்களை அறிமுகப்படுத்துகிறோம். அவை அனைத்துமே நானே கையால் வரைந்து, டிசைன் செய்பவைதான். எதையும் வெளியில் வாங்கி விற்பதில்லை.

அப்போதும் சரி, இப்போது சரி.. நாங்கள் மார்க்கெட்டிங்கிற்கென பெரிதாக செலவு செய்வதில்லை. வாய் வழி விளம்பரம் மூலம்தான் எங்களது தயாரிப்புகள் மக்களைச் சென்றடைகிறது.

”புதிது புதிதாக நாங்கள் அறிமுகப்படுத்தும் உடைகள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதனால்தான் பாலூட்டும் தாய்மார்கள் மட்டுமின்றி, அனைவரும் விரும்பும் வகையில் உள்ளது. வாராவாரம் வாங்கும் கஸ்டமர்கள் எல்லாம்கூட இருக்கிறார்கள்,” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் அபி.
thottil abi

முதலீட்டுக்கே காசில்லை

இரண்டு லட்சத்திற்கும் மேலான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள மாம்ஸ் கிரேடலுக்கு, சென்னை, பெங்களூரு மற்றும் ஜெய்ப்பூர் என மூன்று இடங்களில் டெய்லரிங் யூனிட் உள்ளது. வெப்சைட் மட்டுமின்றி, சென்னையில் நேரடி கடையும் உள்ளது. இந்தக் கடையில் டெய்லர்கள் உட்பட 15 பேரும், மற்ற யூனிட்டுகள் 20க்கும் மேற்பட்ட டெய்லர்களும் என மொத்தம் 35 பேர் அபியிடம் வேலை பார்த்து வருகின்றனர்.

“37 வயதில்தான் நான் மாம்ஸ் கிரேடல் ஆரம்பித்தேன். தொழில்முனைவோராக என பிரத்யேகமாக எதுவும் படிக்கவில்லை. எங்கள் குடும்பத்திலும் நான் தான் முதல் தலைமுறை தொழில்முனைவோர். எப்படி விற்பது, எப்படி மார்க்கெட்டிங் செய்வது என ஒவ்வொரு கட்டமாக நானே கற்றுக் கொண்டதுதான். பிசினஸில் இருந்து பிசினஸ் கற்றுக் கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்,” என்கிறார் சிரித்துக்கொண்டே.

ஆரம்பத்தில் யாருமே எனக்கு சப்போர்ட் செய்யவில்லை. பி.இ. படித்துவிட்டு, இந்த தைக்கும் வேலை எதற்கு? கார்ப்பரேட் வேலைக்கு செல்வதுதான் புத்திசாலித்தனம் என்றெல்லாம் எனக்கு அறிவுரை கூறியவர்கள் ஏராளம். அது மிகவும் கஷ்டமான காலம். கையில் சாம்பிள் செய்து விற்கக்கூட காசு கிடையாது.

ஆனால், இதுதான் எனக்கு கடைசி வாய்ப்பு என்பதை நான் நன்றாக அறிந்திருந்தேன். அதனால், எனக்கு ஒரு 3 மாத கால அவகாசம் தாருங்கள் எனக் கேட்டேன். நான் தைத்த உடைகளை விற்றுப் பார்க்கிறேன். அவை விற்கவில்லை என்றால் நான் கார்ப்பரேட் வேலைக்கு செல்கிறேன் என்ற உறுதிமொழியோடுதான் நான் தொழில் தொடங்கினேன்.

ஆனால், நான் தயாரித்து விற்பனை செய்த உடைகள் மக்களுக்குப் பிடித்துப் போனது. சில மாடல்கள் இரண்டு மணி நேரத்திலேயே விற்றுத் தீர்ந்த சம்பவங்கள்கூட உண்டு. அப்போதிருந்து இப்போது வரை, தொடர்ந்து எங்கள் டிசைன்களை நாங்களே புதுப்பித்து வருகிறோம்.

”இதுதான் பேட்டர்ன் என்று சொல்ல முடியாத அளவிற்கு டிசைன்களை மாற்றி மாற்றி செய்து வருகிறோம்.. புதுமைகளைப் புகுத்தி வருகிறோம். ஆனால் தரத்தில் எப்போதுமே நாங்கள் சமரசம் செய்து கொள்வது இல்லை. இதுதான் எங்களது வெற்றிக்கான மூலக் காரணம் என்றுகூடக் கூறலாம்,” என்கிறார் அபி.
Abhi kalyan

வயது என்பது நம்பர்தான்

'பெஸ்ட் மெட்டர்னிட்டி பிராண்ட் விருது' வாங்கி இருக்கும் மாம்ஸ் கிரேடலுக்கு, உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எனவே, தனது பிராண்டை, மல்டி பிராண்ட் ஸ்டோராக, குளோபல் பிராண்டாக மாற்ற வேண்டும், என்பதுதான் அபியின் கனவாக உள்ளது.

அதன் ஒருகட்டமாக, தற்போது தங்களது நேரடி ஸ்டோரில் பெண்களுக்கான ஸ்கின்கேர் பிராண்ட், ஆரோக்கிய லட்டு என மற்ற பிராண்ட் பொருட்களையும் விற்கத் தொடங்கியுள்ளார்.

“வயது என்பது எப்போதுமே ஒரு நம்பர்தான். காலம் கடந்து விட்டது என பெண்கள் எப்போதுமே தயங்கக்கூடாது. 37 வயதில் முன்பின் அறிமுகமில்லாத இந்தத் தொழிலுக்குள் வந்து, இன்று வெற்றிகரமான தொழில்முனைவோராக வலம் வருகிறேன். நம்பிக்கையும், திறமையும் இருந்தால், எந்த வயதில் வேண்டுமானாலும் சாதிக்கலாம். அதற்கு ஒரு நல்ல உதாரணம் நான் தான்."

எப்போதுமே மற்றவர்களை காப்பி அடிக்கக் கூடாது. நமக்கு என்ன திறமை இருக்கிறது என்பதை பார்த்து அதை தொழிலாக மாற்ற வேண்டும். அது நமக்கு மகிழ்ச்சி தருவதாகவும் இருக்க வேண்டும். அப்படி ஒரு தொழிலை நாம் தேர்வு செய்தால், நிச்சயம் வெற்றி நம்மைத் தேடி வரும், என ஒவ்வொரு வார்த்தையிலும் நம்பிக்கை மிளிர பேசுகிறார் சிங்கிள் மாம் ஆக பல தடைகளைத் தாண்டி வெற்றிப்பாதையில் பயணிக்கும் அபி கல்யாண்.

More News :
facebook twitter