2025ல் மூடப்பட்ட பெரிய ஸ்டார்ட் அப்கள்; பின்னணி என்ன? ஓர் அலசல்!

04:00 PM Dec 09, 2025 | YS TEAM TAMIL

பெரிய அளவில் வெற்றி பெற்ற ஐபிஓ-க்களுடன் 2025ம் ஆண்டு இந்திய ஸ்டார்ட் அப்களுக்கு சிறந்த ஆண்டாக அமைந்திருக்கிறது. அதே நேரத்தில், முன்னதாக ’யூனிகார்ன்’ என வர்ணிக்கப்பட்ட பல ஸ்டார்ட் அப்கள் மூடப்படுவதும் இதே ஆண்டு நிகழ்ந்துள்ளது.

More News :

இந்த ஆண்டு இதுவரை ’729 ஸ்டார்ட் அப்கள் மூடப்பட்டுள்ளதாக’ Tracxn தகவல் தெரிவிக்கிறது. எனினும், முந்தைய ஆண்டு இந்த எண்ணிக்கை, 3,903 என அதிகமாக இருந்தது. 2023ல் இது 2,192 ஆக இருந்தது.

வர்த்தக நிறுவன சேவைகள் பிரிவில் அதிக ஸ்டார்ட் அப்கள் மூடப்பட்டன என்றால், ரீடைல் மற்றும் கல்வி நுட்பத்திலும் அதிக ஸ்டார்ட் அப்கள் மூடப்பட்டன. டன்சோவின் மூடல் ஓரளவு எதிர்பார்க்கப்பட்டாலும், ப்ளுஸ்மார்ட் மற்றும் ஹைக் ஆகியவை மூடப்பட்டது அதிர்ச்சியாகவே அமைந்தது.

மேலும், இந்த ஆண்டு நிதி திரட்டலில் ஏற்பட்ட மாற்றமும், ஆரம்ப நிலை மற்றும் வளர்ச்சி நிலை ஸ்டார்ட் அப்கள் தாக்குப்பிடிக்கும் தன்மையை பாதித்தது.

எப்படியேனும் வளர்ச்சி எனும் முந்தைய அணுகுமுறைக்கு மாறாக முதலீட்டாளர்கள் இப்போது லாபமீட்டல், வருவாய் வாய்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதால், பல ஸ்டார்ட் அப்கள் தங்கள் திட்டங்களை குறைக்க அல்லது சாத்தியம் இல்லா துறைகளில் இருந்து வெளியேற வழிவகுத்தது.

இந்த ஆண்டு மூடப்பட்ட முக்கிய ஸ்டார்ட் அப்கள் மற்றும் அவை பின்னடைவை சந்திப்பதற்கான காரணங்களை யுவர்ஸ்டோரி அலசுகிறது.

ப்ளுஸ்மார்ட் (BluSmart) - ப்ரமோட்டர்கள், கடன்கள், ஆடம்பர கால்ப் மைதானங்கள்

அதிகம் அறியப்படாவிட்டாலும், பிரகாசமான வாய்ப்பு கொண்ட கால்டாக்சி சேவை ஸ்டார்ட் அப் நிறுவனம் ’ப்ளுஸ்மார்ட்’. ரூ.260 கோடி அளவிலான நிதி மோசடியால் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.

துணை நிறுவனம் ஜென்சால் இஞ்சினியரிங் மூலம் இந்த மோசடி நடைபெற்றது. இத்தகைய முறைகேடுகள் தொடர்பான எச்சரிக்கை கதையாக அமைவதோடு, அரசின் கட்டுப்பாடுகள் இல்லாத தன்மையையும் இது உணர்த்துகிறது.

2019ல் புனித் கோயல் மற்றும் அன்மோல் ஜக்கியால் நிறுவப்பட்ட மின்வாகன போக்குவரத்து நிறுவனம் ப்ளுஸ்மார்ட், இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில், அதன் பெரிய சந்தையான பெங்களூர் மற்றும் தில்லி-என்.சி.ஆர் பகுதிகளில் புதிய பதிவுகளை நிறுத்தியது.

பட்டியலிடப்பட்ட பொறியியல் மற்றும் சூரிய மின்சகதி ஆலோசனை நிறுவனமான ஜென்சால் இஞ்சினியரிங் , இந்த நிறுவனத்தின் வெற்றியோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. நிறுவனத்தில் பங்குகளை கொண்டிருக்கவில்லை என்றாலும், ப்ளுஸ்மார்ட் சேவைக்கான பெரும்பாலான கார்களை குத்தகைக்கு அளித்தது.

2022 மற்றும், 2023ம் ஆண்டு வாக்கில் ஜென்சால், அரசு தரப்பிலான நிதி நிறுவனங்கள் IREDA, PFC ஆகியவற்றிடம் இருந்து, ரூ.978 crore கோடி கடன் பெற்றது. இதில், ரூ.663.89 கோடி, 6,400 மின் வாகனங்களை ப்ளுஸ்மார்ட்டிற்காக வாங்குவதற்கானது. இதற்கான மொத்த செலவு ரூ.8390 கோடி என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அந்நிறுவனம் ரூ.567.73 கோடிக்கு 4,704 மின் வாகனங்கள் மட்டுமே வாங்கியது. எஞ்சிய ரூ.262.13 கோடி வேறு வழியில் சென்றுவிட்டது. இதையடுத்து, பங்குச்சந்தை கட்டுப்பாடு அமைப்பு செபி, நிறுவன முறைகேடுகள் தொடர்பாக எச்சரிக்கை செய்தது.

மோசடி ஆவணங்கள், சந்தேகமான பரிவர்த்தனைகள், உறவினர்களுக்கு நிதி மாற்றப்பட்டது, டிஎல்.எப் வீடு வாங்கியது, ஆடம்பர கால்ப் கிளப்கள் உள்ளிட்ட நிறுவனர்கள் தனிப்பட்ட செலவுகளுக்காக நிதி பயன்படுத்தப்பட்டது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

ஜென்சால்; திவால் செயல்முறையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மாதம் பிறகு, ஜுலை மாதம் ப்ளுஸ்மார்ட்டிற்கு எதிரான திவால் நடவடிக்கை துவக்குவதற்கான விண்ணப்பித்தை ஏற்றுக்கொண்டது.

குட்கிளாம்குருப்- GoodGlammGroup:  அறைகள் இல்லாமல் போன பிராண்ட்களின் வீடு:

உள்ளடக்கம் முதல் வர்த்தகம் வரையான பிராண்ட்களின் இருப்பிடமாக செயல்பட்டு வந்த ’குட்கிளாம் குருப்’பின் பயணம், கடன் கொடுத்தவர்கள், தனிநபர் சொத்துகளில் கை வைக்கத்துவங்கியதை அடுத்து, சிக்கலுக்கு உள்ளாகி இந்த ஸ்டார்ட் அப் பிரச்சனைக்குள் உள்ளானது.

பல மாத நிதி நெருக்கடி, நிதி திரட்டுவதில் சிக்கல், குறைந்த விலையில் சொத்துக்கள் விற்பனை, ஊழியர் சம்பள பட்டுவாடா பாதிப்பு மற்றும் வெண்டர்கள் பேமெண்ட் நிலுவை போன்ற பல மாதங்களாக தொடர்ந்து பிரச்சனைகளின் வெளிப்பாடாக இது அமைந்தது.

வார்பர்க் பின்கஸ், ப்ரோசஸ் வென்சர்ஸ், பெஸிமர் மற்றும் ஆக்சல் உள்ளிட்ட முதலீட்டாளர்கள் ஆதரவு பெற்ற நிறுவனம் தீவிரமான கையகப்படுத்தல் உத்தியை பின்பற்றியது. பல நேரங்களில் டிஜிட்டல் ஊடகம் மற்றும் நுகர்வோர் பிராண்ட்களுக்கு அதிக மதிப்பீடு கொடுத்து வாங்கியது. இந்த சொத்துக்கள் பல பின்னர் வளர்ச்சிக்கு தடுமாறி, இறுதியில் குறைந்த விலைக்கு விற்கப்பட்டன.

செயல்முறை மூலதன தேவைக்காக 2024 மார்ச்சில் நிறுவனம் 1.25 டாலர் எனும் தட்டையான மதிப்பீட்டில் 30 மில்லியன் டாலர் திரட்டிய போது நெருக்கடி வெளிச்சத்திற்கு வந்தது. 2025 ஆரம்ப காலத்தில், அக்சல், ப்ரோசஸ் வென்சர்ஸ், பெஸிமர் இயக்குனர் குழுவில் இருந்து வெளியேறினர்.

பிப்ரவரி மாதம் Sirona-வை குட்கிளாம் அதன் நிறுபனர்களுக்கு ரூ.150 கோடிக்கு விற்பனை செய்தது. (வாங்கிய விலை ரூ.450 கோடி). கடந்த மாதம், டிஜிட்டல் ஊடகம் Scoopwhoop-ஐ ரூ.20 கோடிக்கு WLDD நிறுவனத்திடன் விற்றது. 2021ல் ரூ.100 கோடிக்கு கையக்கப்படுத்தப்பட்ட நிறுவனம் இது. மேலும், மிஸ்மாலினி டிஜிட்டல் உள்ளடக்க நிறுவனத்தையும் விற்றது.

எனினும், மறுசீரமைப்பு மற்றும் மறு நிதி முயற்சிகள் குட்கிளாமை மீட்பதில் தோல்வி அடைந்து விட்டது என ஜூலை மாதம் சி.இ.ஓ.டர்பன் சங்க்வி தெரிவித்தார். எஞ்சிய பிராண்ட்கள் இனி விற்கப்படும் அல்லது தனியே இயக்கப்படும் எனும் நிலை உண்டானது.

கடன் கொடுத்த நிறுவனங்கள் பிராண்ட்களை தனியே விற்பனை செய்வார்கள் என தெரிவித்தவர், இந்த விற்பனை செயலாக்கம் பெறவில்லை எனில் அல்லது ஊழியர்கள் ஊதிய பாக்கி கொடுக்கப்படவில்லை எனில், தனது எதிர்கால வரிக்கு பிந்தைய வருமானம் மற்றும் சமபங்கு வருவாயின் 25 சதவீதத்தை அதற்காக ஒதுக்குவதாக தெரிவித்தார்.

டன்சோ -Dunzo:  ஹைபர்லோகல் செயலியின் சரிவு

பத்தாண்டுகளுக்கும் மேலும் பழமையான டன்சோ 2014ல் வாட்ஸ் அப் சார்ந்த பிக் அப் மற்றும் டெலிவரி சேவையாக அறிமுகமானது. கபீர் பிஸ்வாஸ் வழிநடத்திய நிறுவனம் பின்னர், பல இடங்களில் இருந்து மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும் வகையில் மாறியது.

2020ல் குவிக் காமர்ஸ் பிரபலமான போது நிறுவனம் Dunzo டெய்லி சேவையை அறிமுகம் செய்தது. இந்த அறிமுகம் திட்டமிட்டபடி நிகழவில்லை. அதிக செலவுகள், செயல்முறை சவால்கள் மற்றும் ஸ்விக்கி, ஜெப்டோ போன்றவற்றின் போட்டி தாக்கத்தை ஏற்படுத்தியது.

எனினும், 2022ல், ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்திடம் இருந்து 200 மில்லியன் டாலர் நிதி பெற்றது. நிறுவனம் அதன் பெரிய பங்குதாரரானது. ஆனால், இந்த முதலீடு புதிய சிக்கலை கொண்டு வந்தது. இப்போது டன்சோ ரிலையன்சின் ஜியோமார்டிற்கான பின்னணி சேவை ஆதரவாக மாறியது.

இதனிடையே, போட்டி காரணமாக நஷ்டம் அதிகரித்து, இந்த பிரிவில் டன்சோ தனது சாதக அம்சத்தை இழந்தது. 2023ல் நிறுவன விரிசல்கள் மேலும் பரவலாகிறது. ஊதியம் தாமதமானது, வெளிப்படைத்தன்மை குறைந்தது. குவிக் காமர்ஸ் சேவையை பெரிதாக்கியதால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக ஆட்குறைப்பு நிகழ்ந்தது.

அதே ஆண்டு தனது மளிகை டெலிவரி வர்த்தகத்தை மூடியது. வர்த்தக நிறுவனங்களுக்கான கூரியர் சேவை டன்சோ 4 பிஸ்னஸ் மட்டும் தொடர்ந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில், நிறுவனம் 50 சொச்ச ஊழியர்களை கொண்டு இயங்கிய நிலையில் முதலீடு வரண்டது.

இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.கபீர் பிஸ்வாஸ் இந்த ஆண்டு ஜனவரியில் விலகி, பிளிப்கார்ட் குவிக் காமர்ஸ் நிறுவனத்தில் இணைந்த பிறகு, இதன் இணையதளம் மற்றும் செயலி முடங்கியது.

ஹைக்- Hike: கேமிங் வெற்றியும், கொள்கை நெருக்கடியும்

ஒரு காலத்தில் பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் வாட்ஸ் அப்பிற்கான இந்தியாவின் பதில் என கருதப்பட்ட Hike-இன் 13 ஆண்டு பயணம் இந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. கவின் பார்தி மிட்டல் துவக்கிய இந்த சேவை, இளைஞர்களை மையமாக கொண்ட மெசேஜிங் வசதியை அளித்தது.

ஸ்டிக்கர்ஸ், உள்ளூர் உள்ளடக்கம், தனித்துவமான சாட் வசதி கொண்ட சூப்பர் செயலியாக உருவானது. ஒரு கட்டத்தில் 100 மில்லியனுக்கும் மேல் பயனாளிகள் கொண்டிருந்தது.

2021ல் நிறுவனம் தனது மூல நோக்கில் இருந்து விலகி ஸ்டிக்கர் சேட்டை மூடியது. பின்னர் வைப் மற்றும் பணம் சார்ந்த கேமிங் சேவை அளித்த ரஷ் மேடையை துவக்கியது.

“RMG ஒரு போதும் இலக்காக இல்லை என்றாலும், வர்த்தக பொருளாதாரம் மற்றும் இறுதி இலக்கு ஆகியவற்றை அடைவதற்கான வழி,” என கவின் மிட்டல் இது பற்றி கூறியிருந்தார். இந்த மேடை 10 மில்லியன் பயனாளிகளுக்கு மேல் ஈர்த்து, நான்கு ஆண்டு காலத்தில் 500 மில்லியன் டாலர் வருவாயை ஈர்த்தது.

ஆனால் 2025ல், பணம் சார்ந்த கேமிங் மேடைகளுக்கு தடை விதிக்கும் ஆன்லைன் விளையாட்டு தடை சட்டம் கொண்டு வரப்பட்ட போது நிலைமை மாறியது.

இந்த தடையை அடுத்து நிறுவனங்கள் மாற்று உத்தியை நாடின. ஹைக் சர்வதேச சந்தை விரிவாக்கத்தை பரிசீலித்தது. சாப்ட்பேங்க் ஆதரவு பெற்ற நிறுவனம், இந்தியாவில் இருந்து வெளியேறி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா சந்தைகளில் கவனம் செலுத்த தீர்மானித்தது.

இந்த ஆண்டு துவக்கப்பட்ட அமெரிக்க வர்த்தகம் நன்றாக நடைபெற்றாலும், சர்வதேச செயல்பாட்டிற்கு முழு அளவு மறுசீரமைப்பு தேவை என்பதால் இந்திய தடைக்கு பிறகு நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டது.

ஓடிபை -Otipy:  குவிக் காமர்ஸ் அழுதத்தில் சிதைந்த பண்ணை புத்துணர்ச்சி ஐடியா

சந்தா அடிப்படையில் மளிகை பொருட்களை வழங்கிய Otipy, குவிக் காமர்ஸ் துறையின் போட்டி மற்றும் ரொக்க நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு மூடப்பட்டது.  

க்ரோபார்ம் அக்ரோபிராக்ட்ஸ் எனும் தாய் நிறுவனம் கீழ் இயங்கிய நிறுவனம், சமூதாய ரீசெல்லர்கள் மூலம் கூட்டு வாங்குதலை சாத்தியமாக்கி, போட்டி மிகுந்த விலையில் பண்ணை புத்துணர்ச்சி பொருட்களை வழங்குவதாக தெரிவித்தது. இதன் மூலம் விவசாயிகள் மற்றும் நகர்புற வாடிக்கையாளர்கள் இடையே லாஜிஸ்டிக்சை சீரமைத்தது.

முக்கிய ஆதரவு அளித்த ஹீரோ பேமலி அலுவலகம், கடைசி நேரத்தில் விலகிய நிலையில், 10 மில்லியன் டாலர் நிதிச்சுற்றை நிறைவேற்ற முடியாததால் பிரச்சனை துவங்கியது. மேலும், குவிக் காமர்ஸ் எழுச்சிக்கு பிறகு சந்தா சார்ந்த சேவைகள் மற்றும் மளிகை சேவைகளில் தேக்கம் ஏற்பட்ட நிலையில், ஏற்கனவே இருந்த முதலீட்டாளர்களும் விலகினர்.

மே மாத வாக்கில் நிறுவனம், ஊழியர்கள் ஊதியம் தாமதம், வெண்டர் பேமெண்ட் தாமதம், மூத்த தலைமை நிர்வாகி வெளியேற்றம், மற்றும் மூடல் தொடர்பான செய்தி 300 ஊழியர்கள் மற்றும் டெலிவரி ஊழியர்களை பாதித்தது.

2020ல் வருண் கண்ணாவால் நிறுவப்பட்ட இந்நிறுவனம் நான்கு சுற்றுகளில், வெஸ்ட் பிரிட்ஜ் கேபிடல், இன்பிளிக்‌ஷன் பாயிண்ட் வென்சர்ஸ், எஸ்.ஐ.ஜி கேபிடல் உள்ளிட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து 44.2 மில்லியன் டாலர் நிதி திரட்டியது.

இந்த நிறுவனங்கள் தவிர, மைபிக் அப், ஓம் மொபிலிட்டி, பாரத் அக்ரி, பிலிப், லாக்9மெட்டிரியல், பீப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த ஆண்டு வெளியேறின.

மொபிலிட்டி, டி2சி,வேளாண் நுட்பம், அதி உள்ளூர் டெலிவரி உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்டு வரும் சீரமைப்பை இந்த மூடல்கள் உணர்த்துகின்றன. வர்த்தக பொருளாதாரம் சார்ந்த நெருக்கடி மற்றும் அதிகரிக்கும் போட்டி காரணமாக, பல சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களுடன் இணைந்துள்ளன அல்லது நிதி திரட்ட முடியாமல் மூடப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில்: அக்‌ஷிதா, தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan