பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கட்டணத்தை உயர்த்திய Zomato- வாடிக்கையாளர்கள் அதிருப்தி!

12:47 PM Sep 03, 2025 | muthu kumar

Eternal Ltd நிறுவனத்தின் உணவு விநியோக நிறுவனமான Zomato மற்றும் விரைவு வணிக செயலியான Blinkit ஆகியவை உணவு ஆர்டர்களுக்கான தளக் கட்டணத்தை ரூ.10 லிருந்து ரூ.12 ஆக உயர்த்தியுள்ளது, இது பண்டிகை காலத்திற்கு சற்று முன்னதாக ஏற்றப்பட்டுள்ள 20% அதிகரிப்பாகும்.

இந்த 20% அதிகரிப்பு சமூக வலைதளங்களில் வாடிக்கையாளர்களின் கடுமையான விமர்சனங்களை ஈர்த்துள்ளன. Zomato-வின் மேலாண்மையை வகிக்கும் திபீந்தர் கோயல் தலைமையில், கடந்த ஆகஸ்ட் 2023-ல் ரூ.2 என்று துவங்கப்பட்ட இக்கட்டணம், பல்வேறு கட்டங்களில் உயர்த்தப்பட்டு வந்துள்ளது.

டிசம்பர் 2023-ல் ரூ.3.

ஜனவரி 2024-ல்ரூ.4.

ஏப்ரல் 2024-ல் – ரூ.5

ஜூலை 2024-ல் –முக்கிய நகரங்களில் ரூ.6

தீபாவளி 2024-ல் – ரூ.10

தற்போது (செப்டம்பர் 2025) – ரூ.12 என்று அதிகரிக்கப்பட்டுக் கொண்டே வந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் வெறுப்படைந்துள்ளனர். மேலும், பண்டிகைக்காலங்களில் ஏற்றும் கட்டணங்களை நிரந்தரமாக்கி வருகிறது சொமாட்டோ என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன.

இந்த கட்டண உயர்வு மூலம் Zomato-வுக்கு மாதம் சராசரி ரூ.15 கோடி வருமானம் கிடைக்கும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் ஆண்டுக்கு இது ரூ.180–200 கோடி வரை வருவாய் ஈட்டித்தரும், என நிபுணர்கள் கூறுகின்றனர்.

நுகர்வோர்களைக் கசக்கிப் பிழிந்து இந்திய இணைய நிறுவனங்கள் வருவாயைப் பெருக்கி வருகின்றன. போட்டியாளரான ஸ்விக்கி ஏப்ரல் 2023-ல் ரூ.2 கட்டணம் வசூலிக்கத் தொடங்கினார், அதன் பின்னர், பெரும்பாலான நகரங்களில் அதை ரூ.12 ஆக உயர்த்தினர். பண்டிகைக் காலத்தில் தற்காலிகமாக ரூ.14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நிறுவனம் பலவீன நிலையை எதிர்கொண்டு வருகிறது. ஜூன் காலாண்டில் எடர்னல் நிறுவனம் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.25 கோடி ($3 மில்லியன்) ஈட்டியதாக அறிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் ரூ.253 கோடியாக இருந்தது. பிளிங்கிட்டின் வருவாய் ரூ.4,206 கோடியிலிருந்து ரூ.7,167 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், Zomato-வின் வேகமான பொருள் விநியோக சேவையான Blinkit தற்போது உணவுப் பகுதியைவிட அதிக வருமானத்தை தரும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இதன் பின்னணியில், Eternal Ltd. பங்கு விலை 2% உயர்ந்துள்ளது, இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.