'வேலைவாய்ப்பு to கிளைமேட் டெக்' - புத்தாக்கத்துடன் சாதிக்கும் 4 தமிழக ஸ்டார்ட்அப்கள்!

10:30 AM Sep 26, 2025 | Jai s

தமிழ்நாட்டின் ஸ்டார்ட்அப் சூழல் பல துறைகளில் தொடர்ச்சியாக புதுமைகளை வெளிப்படுத்தி வருகிறது. இது ஸ்டார்ட்அப் துறையின் மையமாக தமிழ்நாட்டின் நிலையை வலுப்படுத்துவதோடு, இந்தியாவின் ஜிடிபி (GDP) பங்களிப்பில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் திகழ வைக்கிறது.

2032-ம் ஆண்டுக்குள் உலக அளவில் சிறந்த 20 ஸ்டார்ட்அப்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களின் மையமாக மாறுவதற்கான லட்சியத்தோடு முன்னேறிவரும் வேளையில், நிறுவனங்கள் எதிர்கால பொருளாதாரத்தை குறிவைத்து பல்வேறு கண்டுபிடிப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

XYMA Analytics-ன் தொழில்துறை புரட்சி:

கற்பனை செய்து பாருங்கள்: 1500 டிகிரி செல்ஸியஸ் வெப்ப நிலையை எட்டும் இரும்பு உலையை நீங்கள் கண்காணிக்கிறீர்கள். ஆனால், உங்கள் வழக்கமான சென்சார்கள் 800 டிகிரி செல்ஸியசில் செயலிழந்துவிட்டால், என்ன செய்வது?

இந்தக் கேள்வியும் சவாலும்தான் டாக்டர் நிஷாந்த் ராஜா அண்ட் கோ-வை XYMA Analytics என்கிற நிறுவனத்தை சென்னை ஐஐடி ரிசர்ச் பார்க்கில் 2019-ம் ஆண்டு நிறுவ வழிவகுத்தது. இது டீப்-டெக்னாலஜி நிறுவனம். அதாவது, அறிவியல் அல்லது பொறியியல் அடிப்படையில் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்படும் ஸ்டார்ட்அப் தான் டீப்-டெக்னாலஜி நிறுவனம் என்பார்கள்.

Xyma Analytics founder Nishanth Raja

இந்நிறுவனத்தின் முக்கிய கண்டுபிடிப்பு, தீவிர வெப்பநிலையை எதிர்கொள்ளும் அல்ட்ராசோனிக் வேவ்கெய்ட் சென்சார். தூய தமிழில் சொல்வதென்றால் தீவிர வெப்பநிலையை எதிர்கொள்ளும் மீயொலி அலை வழிகாட்டி உணரிகள். உலகளவில் 15+ நிறுவனங்களுக்கு காப்புரிமை பெற்ற அல்ட்ராசோனிக் சென்சார் மூலம் துல்லியமான வெப்பநிலை மற்றும் மல்டி பாராமீட்டர்களை வழங்கும் சேவைகளை செய்கிறது இந்நிறுவனம்.

“அதிநவீன சென்சார் தொழில்நுட்பத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதானது அல்ல. இதற்கு ஒழுக்கம், கிரியேட்டிவிட்டி, அதோடு மீள்திறன் தேவை,” என்கிறார் நிறுவனரான டாக்டர் நிஷாந்த் ராஜா.

இந்தக் கூற்றை விட அவரின் தயாரிப்பு நிறைய பேசுகின்றன. ஆம்... ரிலையன்ஸ், வேதாந்தா இவர்கள் தவிர எமிரேட்ஸ் ஸ்டீல் மற்றும் LAM ரிசர்ச் போன்ற ஃபார்ச்சூன் 500 ஜாம்பவான் நிறுவனங்கள் சென்னை நிறுவனமான XYMA Analytics-ன் கண்டுபிடிப்பான சென்சார்களை வெகுவாக நம்புகின்றன.

XYMA Analytics-ன் வருவாயில் பாதி அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஸ்வீடன் போன்ற சர்வதேச சந்தைகளில் இருந்தே கிடைக்கிறது. 20+ காப்புரிமைகளை பெற்று புதுமையான கண்டுபிடிப்புகளை கொண்டு 60+ வேலைவாய்ப்புகளை உருவாக்கிய ஓர் உன்னதமான மேட்-இன்-இந்திய வெற்றிக் கதைதான் இந்நிறுவனம்.

‘இணைய உலகம்’ என்று பொருள்படும் இந்நிறுவனத்தின் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) சென்சார்கள் வெறும் கண்காணிப்பு என்பதை தாண்டி கணிப்புகளை செய்கின்றன. XYMA நிறுவனத்தின் தொழில்நுட்பம் ஏஐ பகுப்பாய்வுகளுடன் இணைந்து திட்டமிடப்படாத செயலிழப்பு நேரத்தை கண்காணித்து தடுக்கிறது. மேலும், இந்தியாவின் சென்சார் இறக்குமதியை வெகுவாக குறைத்து தொழில் நிறுவனங்களின் மில்லியன் கணக்கான பணத்தை மிச்சப்படுத்துகிறது.

கழிவு டூ செல்வம்... Buyofuel:

இந்தியாவுக்கு மிகப் பெரிய தலைவலியாக உள்ள கழிவுப் பொருட்களில் மறைந்திருந்த ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புக்கொண்ட தொழிலை கோயம்புத்தூரில் உள்ள கிஷன் கருணாகரனும் அவரது இணை நிறுவனர்களும் கண்டறிந்ததுதான் இந்த 'பையோஃப்யூல்' (Buyofuel). இவர்களின் கண்டுபிடிப்பு, டெக்னலாஜி மூலம் இயக்கப்படும் பயோ எரிபொருள் சந்தையை காலநிலை மாற்றத்துக்கு எதிரான ஆயுதமாக மாற்றுவது. இது இந்தியாவிலேயே முதல் முறை செய்தது இந்நிறுவனமே.

L-R - Prasad Nair, Kishan Karunakaran, Sumanth Kumar and Venkateshwaran Selvan

'பையோஃப்யூல்' என்பது வெறும் மற்றொரு வணிக தளம் மட்டுமல்ல. இது எரிசக்தி பாதுகாப்பிற்கான இந்தியாவின் பதில். தனித்தனியாக உள்ள பயோ எரிபொருள் சப்ளைகளை ஒருங்கிணைத்து, முழுமையான கண்காணிப்புத்தன்மையை வழங்குவதன் மூலம், 150,000 மெட்ரிக் டன் பயோ எரிபொருட்களை புதைபடிவ எரிபொருட்களை மாற்றியுள்ளது. அதோடு, 1,00,000 மெட்ரிக் டன்னுக்கும் மேற்பட்ட கார்பன் டை ஆக்சைடு உமிழ்வை ஈடுசெய்திருக்கிறது.

தொடங்கப்பட்ட 5 ஆண்டுக்குள் 100 மடங்கு வளர்ச்சியை கொண்டுவந்த இந்நிறுவனத்தின் அபார வளர்ச்சி, இந்திய எரிபொருள் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் கவனத்தை ஈர்க்கவும் தவறவில்லை. அதனால், காலநிலை மாற்றத்துக்கு எதிரான பையோஃப்யூல் நிறுவனத்தை 'சிறந்த பயோ எரிபொருள் ஸ்டார்ட்அப் நிறுவனம்' என்று அறிவித்தார். விருதை தாண்டி எண்களே இந்நிறுவனத்தின் உண்மையான வளர்ச்சியை சொல்கின்றன. 40+ நிறுவனங்களுக்கு டிகார்பனைசிங் எனப்படும் கரிமநீக்கம் செய்யும் அதேநேரத்தில் ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் பயோ எரிபொருள் வழங்கும் ஒரே நிறுவனம் இதுதான்.

பையோஃப்யூல் நிறுவனத்தின் லட்சியம்: 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த எரிபொருள் நுகர்வில் 5%-ஐ அதன் தளத்தின் மூலம் மாற்றுவது. 85% எரிபொருளை இறக்குமதி செய்யும் ஒரு நாட்டில், இப்படியான லட்சியம் என்பது துணிச்சலானது மட்டுமல்ல, அவசியமானதும் கூட.

கைகள் (Kaigal) நிறுவனத்தின் வேலைவாய்ப்பு புரட்சி:

நாமக்கல்லின் பரமத்தி வேலூரில் இருந்து கொண்டு இந்தியாவின் ப்ளூ காலர் எனப்படும் உடல் உழைப்பு சார்ந்த வேலைவாய்ப்பு நெருக்கடியைச் சமாளிக்கும் இருவர் உள்ளனர். அவர்கள் தான் பாலமுருகன் சுந்தரராஜன், ரவின் சோமி. இவர்கள் தொடங்கிய கைகள் சர்வீஸின் மோட்டோ சிம்பிள் தான், ஆனால் ஆழமான நம்பிக்கை கொண்டது. அது “திறமை எல்லா இடங்களிலும் உள்ளது - வாய்ப்பும் அவசியம்” என்பதே.

தமிழ் மொழியுடன் தொழில்நுட்பம் கொண்ட இவர்களின் வேலைவாய்ப்பு தளம் தமிழ்நாடு முழுவதும் ஒரு அலையை உருவாக்கியுள்ளது. அதற்கு இந்த எண்ணிக்கையே சான்று. இதன் வெப்சைட்டில் 2 லட்சம் வேலை வாய்ப்புகள் எளிதாக்கப்பட்டுள்ளன. அதேநேரம், வேலை தேடும் 4.5 லட்சம் பேர் இதில் பதிவு செய்துள்ளனர். மேலும் 22,000+ MSME நிறுவனங்கள் ஆதரவு தருகின்றன.

இந்தியாவின் நகர்ப்புறங்களில் ஏஐ மற்றும் ஆட்டோமேஷன் பற்றி விவாதம் நடந்துக் கொண்டிருக்கையில், கிராமப்புறங்களில் அடிப்படை வேலைவாய்ப்பு கிடைக்கவே போராட வேண்டியிருக்கிறது. கைகள் நிறுவனம் இந்த இடைவெளியை நிரப்புகிறது. MSME நிறுவனங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆட்களை வழங்குகிறது. அதேநேரம், தொழிலாளர்களுக்கு கண்ணியமான வாழ்வாதாரத்தை அமைத்து கொடுக்கிறது. இது தான் கைகள் நிறுவனத்தின் உண்மையான கண்டுபிடிப்பு.

'10-1-1 விஷன்' என்பது இந்த ஸ்டார்ட்அப் 2028ம் ஆண்டுக்குள் கொண்டுள்ள லட்சியம். அதாவது, இது வேலை தேடும் 10 மில்லியன் மக்கள், வேலை வழங்கும் 1 மில்லியன் பேர், 1 மில்லியன் வேலைவாய்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதே இந்த '10-1-1 விஷன்'. மத்திய அரசின் STPI Chunauti 2.0 மற்றும் தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி துறையின் ஆதரவையும் இந்த நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Log2Base2-ன் விஷுவல் புரட்சி:

வழக்கமான கோடிங் கற்றலில் ஒரு சிக்கல் உள்ளது. கோடிங் என்றாலே, எண்ணற்ற வார்த்தைகள் அதிகமாக இருப்பது தான் அந்த சிக்கல். சென்னையைச் சேர்ந்த பிரேம்குமார் ராமகிருஷ்ணன் இந்த சிக்கலை களைய Log2Base2 என்கிற நிறுவனத்தை கட்டமைத்தார். இது கோடிங் செய்வதற்கான உலகின் முதல் விஷுவல் தளம்.

70-க்கும் மேற்பட்ட நாடுகளில் 7,00,000-க்கும் மேற்பட்ட கற்பவர்கள் இதற்கு இருப்பதுதான் இந்த நிறுவனத்தின் வெற்றி. இந்தி, தெலுங்கு, தமிழ், பெங்காலி மற்றும் கன்னட மொழிகளில் இத்தளத்தில் படிப்புகள் உள்ளன. Log2Base2 நிறுவனத்தின் கேம் சேஞ்சிங் ஆன விஷயம் எதுவென்றால், லாபத்தை பார்க்கும் அதேவேளையில், ஆங்கிலம் பேசத் தேறியவர்களுக்கு 'கோடிங்' கல்வியை ஜனநாயகப்படுத்தியது தான்.

Log2Base2-ன் அனிமேஷன் கல்வி சிக்கலான புரோகிராமிங் படிப்பைக் கூட எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய விஷுவல் காட்சிகளாக தருகின்றது. இது வெறும் Edtech எனப்படும் கல்வி தொழில்நுட்பம் மட்டுமல்ல; மில்லியன் கணக்கானோர் கோடிங் வேலைவாய்ப்பைகளை பெற முடியாமல் இருக்க காரணமான மொழித் தடையை இது உடைத்திருக்கிறது.

Log2Base2-ன் வெற்றி ஓர் உண்மையை நிரூபிக்கிறது. அது, கண்டுபிடிப்புக்கும் புதுமைக்கும் எப்போதும் சிலிக்கான் வேலி மட்டும் தேவையில்லை. சில நேரங்களில், உள்ளூர் தேவைகளைப் புரிந்துகொண்டு அவற்றை உலகளவில் அளவிடுவதன் மூலம் சிறந்த தீர்வுகள் கிடைக்கும் என்பதுதான்.

StartupTN:

மேலே குறிப்பிட்ட இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் பன்முகத்தை இணைப்பது எது? StartupTN-ன் டான்சீட் திட்டம் (TANSEED) என்பது ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முயற்சிகளுக்கு மானிய அடிப்படையில் நிதியுதவி அளிக்கும் தமிழ்நாடு அரசின் திட்டம் ஆகும். பணமில்லை என்ற காரணத்தால் தொழில்முனைவோர் மனப்பான்மை முடங்கிவிடக் கூடாது என்பதற்காக புதுமைகளை கொண்டு வர அரசாங்கம் தரும் ஒரு ஆதரவு இது.

StartupTN-ன் டான்சீட் திட்டம் மூலம் ஒவ்வொரு நிறுவனமும் ரூ.10 லட்சம் நிதியுதவியைப் பெறுகின்றன. அதே நேரத்தில், பெண்கள் தலைமை வகிக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற, வேளாண் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்நுட்பத் துறைகளை சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ரூ.15 லட்சம் வரை நிதியுதவியைப் பெற முடியும். இந்த நிதி ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களின் கூட்டணி, சர்வதேச சந்தைகள் மற்றும் தொடர்ச்சியான முதலீடுகளுக்கு அணுகலை பெற உதவுகின்றன.

எண்கள் விளையாட்டுக்கு அப்பால்...:

2300-ல் இருந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இன்று 12,000+ எண்ணிக்கையை கடந்து $27.4 பில்லியன் மதிப்பு கொண்ட நெட்வொர்க்காக மாறியிருக்கும் பயணத்தை தமிழ்நாடு கொண்டாடும் அதேவேளையில், மேலே பேசப்பட்ட இந்த நான்கு நிறுவனங்களும் ஒன்றை தெளிவாக பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அது பன்முகத் தன்மை கொண்ட புதுமைகளை வளர்க்கும் மாநிலத்தின் திறன்.

2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி முன்னேறிச் செல்லும்போது, ​​XYMA Analytics, Buyofuel, Kaigal Services மற்றும் Log2Base2 போன்ற நிறுவனங்கள், இந்திய கண்டுபிடிப்புகளின் எதிர்காலமாக தமிழ்நாட்டின் முகவரியைக் கொண்டிருக்கலாம். இதற்கு வழிகாட்டியாக, தலைமை தாங்கி வழிநடத்தும் தமிழ்நாடு தனது சொந்த எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்வது மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் அதற்கு வெளியேயேயும் ஒரு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாகவும் அமைகிறது என்றால் மிகையல்ல.


Edited by Induja Raghunathan