
ஜோஹோ கார்பரேஷன் மற்றும் யூனிகார்ன் இந்தியா வென்சர்ஸ் தலைமையிலான சுற்றில் அண்மையில் ரூ.107 கோடி நிதி திரட்டிய நிலையில் செமிகண்டக்டர் நிறுவனம் 'நெட்ரசெமி' (Netrasemi) இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.ஜோதிஸ் இந்திராபாய், நிறுவன வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து உற்சாகமாக இருக்கிறார்.
இந்தியாவின் செமிகண்டக்டர் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பிரகாசிப்பதற்கான நேரம் இது, என அவர் நம்புகிறார். இந்நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் ஆர்வத்தை ஈர்ப்பதோடு, அரசின் ஆதரவையும் பெற்றுள்ளன. அண்மை நடவடிக்கைகள் தரும் உற்சாகத்தோடு இந்திராபாய் தனது நிறுவனத்தை அதி நவீன புதுமையாக்கத்தோடு முன்னோக்கிக் கொண்டு செல்ல விரும்புகிறார்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப்’பின் நோக்கமும், இலக்கும் தெளிவாக இருக்கிறது. செலவு குறைந்த தன்மை, செயல்திதிறன் மற்றும் அதிக செயல்பாடு ஆகிய அம்சங்களை மனதில் கொண்டு பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சிப்களை, எட்ஜ் சாதனங்களில் நேரடியாக உள்ளீடு செய்து ஏஐ அளிக்கும் வாய்ப்புகளை முழுவதும் பயன்படுத்திக்கொள்வது எனும் வகையில் அது அமைகிறது.

எட்ஜ் வலைப்பின்னலில், பயனர் அல்லது தரவுகள் அருகாமையில் இருக்கும் சாதனம் ’எட்ஜ் சாதனம்’ என அறியப்படுகிறது. தரவுகள் அலசல் மற்றும் ஆய்வு நேரடியாக நிகழ்கின்றன. ஏஐ எட்ஜ் என்றும் அறியப்படும் எட்ஜ் ஏஇ, மைய கிளவுட் சர்வரில் அல்லாமல், எட்ஜ் சாதனங்களில் நேரடியாக இயக்கப்படும் அல்கோரிதம் மற்றும் ஏஐ மாதிரிகளை குறிக்கிறது.
யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.ஷ்ரத்தா சர்மாவுடனான உரையாடலில்,
”எட்ஜ் எனும் போது உங்கள் சாதனங்கள் மற்றும் வளாகத்தில் நுண்ணறிவை கொண்டு வருகிறீர்கள் என பொருள். சென்சார் தரவுகள் அல்லது முக்கிய தகவல்களை கிளவுட் அல்லது சர்வருக்கு அனுப்புவதற்கு பதிலாக, சாதனத்திலேயே நுண்ணறிவை கொண்டு வருகிறோம்,” என இந்திராபாய் விளக்கம் அளித்தார்.
பல சிப் நிறுவனங்கள் இந்த பரப்பில் நுழைந்து வருகின்றன. நெட்ரசெமியும் இந்த போட்டியில் இருப்பதாகக் கூறுபவர் உண்மையான எட்ஜ் சந்தையை உருவாக்கவும் நம்பிக்கை கொண்டுள்ளார்.
மில்லிநொடி முக்கியமாக அமையும் காலத்தில், சாதனங்களில் செய்யப்படும் தரவுகள் அலசல் லேடன்சியை குறைத்து, தனியுரிமையை மேம்படுத்தி, எரிசக்தி மேம்பாட்டை அளிக்கிறது. நெரிசல் மிக்க சரக்கு இடத்தில் செயல்படும் ட்ரோன் அல்லது பாதுகாப்பு மீறலை கண்டறியும் கண்காணிப்பு காமிராவோ எட்ஜ் ஏஐ முக்கிய பங்கு வகிக்கிறது. நிகழ்நேர எதிர்வினை, தரவு இறையாண்மை மற்றும் நீடித்த தன்மை சாத்தியம் ஆகியவற்றை அளிக்கும் புதுமையாக்கமாக திகழ்கிறது.
புதுமையான சிப்கள்
நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வை அதன் சொந்த நுட்பம் சார்ந்து அமைகிறது. சந்தையில் கிடைக்கும் சிப்களை வாங்குவதற்கு பதிலாக நிறுவனம் குறிப்பிட்ட துறைகளுக்கு ஏற்ற சிப்களை தானே உருவாக்க தீர்மானித்திருக்கிறது.
“நாங்கள் தனித்தன்மை வாய்ந்த சிப்களை உருவாக்கி வருகிறோம், ஒரு சிப் மட்டும் அல்ல, குறிப்பிட்ட துறைக்கான ஏஐ செயலாக்கத்திற்கு உதவும் வன்பொருள் சார்ந்த தனித்த அம்சம் கொண்ட பல சிப்கள்,” என்கிறார்.
காப்புரிமை பெறப்பட்ட இந்த சிப் கட்டமைப்பு கண்காணிப்பு, ரோபோடிக்ஸ், தானியங்கி ட்ரோன்கள், தொழிற்சாலை தானியங்கிமயம் என பல துறைகளில் பயன்படுகிறது. ஒவ்வொரு சிப்பும் எட்ஜ் சூழுலுக்கு ஏற்ற வகையில் செலவு, எரிசக்தி மற்றும் செயல்பாட்டு வரம்புகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த அணுகுமுறை உடனடியாக சாத்தியமாகிவிடவில்லை. 2020ல் துவக்கப்பட்ட நிறுவனம், ஐபி தொகுப்பு மற்றும் வர்த்தக திட்டம் வலுவாக அமையும் வரை முக்கிய படியை (டேப் அவுட்) திட்டமிட்டு தாமதமாக்கியது.
சிப் வடிவமைப்பில், டேப் அவுட் என்பது, இறுதி செய்யப்பட்ட வடிவமைப்பு தரவுகள் உற்பத்திக்காக பேப்ரிகேஷன் ஆலைக்கு செல்லும் இறுதி கட்டத்தை குறிக்கிறது.
“அறிவுசார் சொத்துரிமை தொகுப்புக்கு முன்னுரிமை அளித்து, நல்லவர்த்தக திட்டத்தை உருவாக்கி எங்களுக்கு நாங்களே நம்பிக்கை உருவாக்கி கொண்ட பிறகே நிறுவனத்தை துவக்கினோம்,” என்கிறார்.
ஆய்வின் தாக்கம்
ஆய்வு பணிகளில் இருந்து முழுவீச்சிலான வர்த்தக செயல்பாட்டிற்கு மாறிக்கொண்டிருக்கும் நிலையில் சரியான நேரத்தில் நிதி கிடைத்துள்ளது. தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் நிதி திரட்டலின் ஒரு பகுதியாக அண்மை நிதிம் அமைகிறது.
“நிறுவனம் வளர்ச்சியை எதிர்நோக்கியிருக்கும் சரியான நேரத்தில் இந்த நிதி கிடைத்துள்ளது. நாங்கள் ஆய்வு நிலையில் இருந்து வர்த்தக நிலைக்கு மாறிக்கொண்டிருக்கிறோம், நிறைய விதை நிதி தேவை, குறிப்பாக செமிகண்டக்டர் பயணத்தில் அதிகம் தேவை,” என்கிறார் இந்திராபாய்.
ஒற்றை மாஸ்க் செட் கோடிகளில் செலவாகக் கூடிய துறையில் மூலதனம் தான் வளர்ச்சிக்கான எரிபொருள். அண்மை நிதி, நிறுவனத்தின் ஆய்வு செலவுகளை ஈடு செய்து, உற்பத்தி மற்றும் மார்க்கெட்டிங் திறனை மேம்படுத்தி, உற்பத்தியிலேயே ஏஐ மற்றும் வீடியோ அலசல் கொண்ட சிஸ்டம் ஆன் சிப் (எஸ்.ஓ.எஸ்) வகைகளை அறிமுகம் செய்ய உதவும்.
எஸ்.ஓ.எஸ் சிப் என்பது ஒரு சாதனத்திற்கு தேவைப்படும், பிராசஸர், நினைவாற்றல் இதர அம்சங்கள், என அனைத்தையும் ஒற்றை அங்கமாக கொண்டிருக்கும் சிப் ஆகும். நிறுவனம் இப்போது டேப் அவுட் நிலையில் இருக்கும் இரண்டு மேம்பட்ட எட்ஜ் ஏஇ சிப்களை உருவாக்கியுள்ளது.
அடுத்த 12-18 மாதங்களில் நிறுவனம் இந்த சிப் வகைகளை உற்பத்திக்கு கொண்டு வந்து, நட்ஜ் சர்வர்களுக்கான அடுத்த தலைமுறை சிப்களுக்கான ஆய்வை துவக்க உள்ளது. 2-26 துவக்கத்தில் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சிப் தயாரிப்பு நிறுவனங்கள் உலக அரங்கில் நுழையும் நிலையில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சீனா போன்ற நாடுகளின் வலுவான நிறுவனங்களுடன் போட்டியிடும் நிலை உள்ளது. இந்த துறையில் அதிக முதலீடு செய்யப்படும் அமெரிக்கா, இஸ்ரேல், சீனா ஆகிய நாடுகளுடன் போட்டியிடுகிறோம், என்கிறார் இந்திராபாய். இருப்பினும், இந்தியா அப்படியே அமெரிக்க செயல் புத்தகத்தை பின்பற்ற முடியாது என்கிறார்.
“செமிகண்டக்டர் பரப்பில் வளர அவர்களிடம் தேவையான வெற்றிகரமான மனிதர்கள் மற்றும் வெற்றிக்கதைகள் உள்ளன. ஏனெனில் இன்று, உலகின் மிகப்பெரிய நிறுவனமாக அற்புதமான செமிகண்டக்டர் நிறுவனம் NVIDIA உள்ளது.”
இந்திய போட்டியாளர்கள், செலவு குறைந்த, கவனக்குவிப்பு கொண்ட திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும், என்கிறார். இவை ஏஐ குறுகிய பிரிவுகளை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். உள்நாட்டு ஐபியை சாதகமாக கொண்டிருப்பதோடு, நீண்ட கால தன்மையில் சமரசம் இல்லாமல் வேகத்திற்கு உதவும் கூட்டுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த சாதகமான அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதன் மூலமே பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும், என்கிறார்.
இந்த சவால்களை உணர்ந்து, இந்திய அரசு வடிவமைப்பு சார்ந்த பல்வேறு ஊக்க சலுகைகள் (DLI) மற்றும் சிப் டு சிஸ்டம் (C2S) போன்ற ஆதரவு திட்டங்களை அறிவித்துள்ளது. சிப் உருவாக்கத்திற்கு முதலில் தேவைப்படும் செலவை சமாளிக்க இது உதவுகிறது.
“அரசு இந்த கவனத்தை உண்டாக்கியதுமே, ஸ்டார்ட் அப்’களுக்கு DLI, C2S போன்ற திட்டங்களை உருவாக்கினர்,” என்கிறார்.
இந்த திட்டங்கள் வடிவமைப்பு செலவில் ஒரு பகுதியை திரும்பி அளித்து, முன்னோட்ட வடிவாக்கத்திற்கு மானியம் அளித்து, இணையான நிதியை அளித்து, ஆரம்ப நிலை வர்த்தகங்கள் சுமையை குறைக்கின்றன. ஆரம்ப நிலை ஆய்வில் இருந்து இடரை நீக்குவதன் மூலம் அரசு திறமை மற்றும் முதலீடு மெல்ல மென்பொருள் அல்லது சேவைகள் நோக்கி செல்வதைவிட நீண்ட கால புதுமையாக்கத்தை தக்க வைக்கும் வகையில் துடிப்பான செமிகண்டக்டர் சூழலை உருவாக்க வழி செய்கிறது.
தற்போது 100 சதவீத சிப்களை இறக்குமதி செய்யும் நாட்டிற்கு இந்த ஆதரவு முக்கியமானது.
மிக முக்கிய துறைகளான ராணுவம், விண்வெளி போன்ற துறைகளில் 0.01 சதவீதம் மட்டும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது, மற்றபடி இறக்குமதி செய்யப்படுகிறது, என்கிறார் இந்திராபாய். இந்த சார்பு இறக்குமதி செலவை அதிகமாக்குவதோடு, பொருட்கள் சார்ந்த பொருளாதாரமாக மாறும் இலட்சியத்திற்கும் தடையாக அமைகிறது.
நம்மிடம் முக்கிய பாகங்கள் இல்லாததே ஒரு தேசமாக நம்மால் தயாரித்து, உற்பத்தி செய்து அல்லது ஆய்வில் ஈடுபட முடியால இருக்கிறது என்கிறார். மின்னணு பொருட்களுக்கு முக்கியமாக தேவைப்படும் பாகம் சிப் ஆகும். இது இங்கு இல்லாமல் இருக்கிறது. அதிக லாபம் கொண்ட மின்னணு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது.
நெட்சசெமி நிறுவனத்தால் அண்மை நிதியை கொண்டு முன்னோட்ட வடிவில் இருந்து செயலிகள் சார்ந்த உற்பத்திக்கு மாற முடியும் என்றால் இந்தியாவின் மேக் இன் இந்தியா கனவில் முக்கிய தருணமாக அமையும். ஆனால், இதில் பல தடைகள் உள்ளன. ஒவ்வொரு புதிய தலைமுறை சிப்களும் புதிய செலவுகள் கொண்டவை. புதிய பொறியியல் சுழற்சி, புதிய பட்ஜெட் மற்றும் சந்தை கால அட்டவனை தேவை.
இந்த சிக்கலான அம்சங்களுக்கு நடுவே, ஆர்வம் உள்ள செமிகண்டக்டர் தொழில்முனைவோருக்கான எச்சரிக்கை அம்சத்தையும் இந்திராபாய் குறிப்பிடுகிறார். முன்கூட்டியே நிதி திரட்டும் ஆர்வத்தை தவிர்க்க வேண்டும், இது சோதிக்கப்படாத கருத்தாக்கத்தில் ஸ்டார்ட் அப்பை முடக்கலாம், என்கிறார்.
தேவைக்கு முன் முதலீடு திரட்டுவது மிகவும் மோசமானது. இத்தகைய முதலீடு கிடைத்தவுடன் முதிர்ச்சி அடையாத ஐடியாவில் சிக்கிக் கொள்ள நேரும் என்கிறார். சில வாரங்கள் அல்லது மாதங்களில் பாதை மாறலாம் என்பது போல் அல்லாம, செமிகண்டக்டர் பொருட்களுக்கு முதிர்ச்சியை அடைவதற்கு ஏழு அல்லது எட்டு ஆண்டுகள் ஆய்வு தேவை என்கிறார். எனவே, நிறுவனர்கள் ஆய்வில் கவனம் செலுத்தி, துறை சார்ந்த அனுபவத்தை வளர்த்து, சிப் உருவாக்கத்திற்கு தேவையான மராத்தான் ஓட்டம் போன்ற தன்மையை புரிந்து கொள்ளும் திறன் கொண்ட வழிகாட்டிகளை நாட வேண்டும்.
சொந்த ஐபி, புதிய நிதி மற்றும் சர்வதேச அம்சங்கள் பற்றிய தெளிவு காரணமாக நெட்ரசெமி நிறுவனம் எட்ஜ் ஏஐ அலையில் பயணிக்கும் திறன் கொண்டுள்ளது, என இந்திராபாய் நம்பிக்கை கொண்டிருக்கிறார். இந்தியாவில் இருந்து, இந்தியாவுக்கான மற்றும் உலகிற்கான சிப்களை எதிர்பார்க்கலாம், என்கிறார்.
யுவர்ஸ்டோரி குழு, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan