
பல் மருத்துவரான டாக்டர்.மனோஜ் ராஜன், 2019ம் ஆண்டு, இளம் மென்பொருள் பொறியாளர் ஒருவருக்கு சிகிச்சை அளித்தார். அந்த இளைஞர் தாமதமாக பல் பரிசோதனைக்கு வந்திருந்தார். ஆறு மாதங்களுக்கு முன் வந்திருந்தால், பில்லிங் மட்டும் செய்திருக்கலாம் எனும் நிலையில், தற்போது ரூட் கெனால் மற்றும் கிரவுன் சிகிச்சை தேவைப்பட்டது.
“ஏதோ பிரச்சனை என தெரிந்தது டாக்டர். ஆனால், என்னால் செலவு செய்ய முடியவில்லை...” என அந்த பொறியாளர் கூறியதை டாக்டர் ராஜனால் மறக்க முடியவில்லை.

“பல் சிகிச்சை என்பது செலவுமிக்கதாக மாறிக்கொண்டிருக்கிறது என்பது தெரியும் என்றாலும், அந்த தருணம் தீவிரமானதாக இருந்தது. நல்ல வேலையில் இருக்கும் இளம் பொறியாளர் ஒருவரால் பரிசோதனைக்காக ரூ.500 கொடுக்க முடியவில்லை. அந்த தருணத்தில் தான், பல் சிகிச்சை அளிக்கப்படும் விதத்தைல் மாற்றம் தேவை என உணர்ந்தேன்,” என யுவர்ஸ்டோரியிடம் பேசும் போது கூறினார்.
2022ல் டாக்டர் ராஜன், ஆதித்யா அண்ட்ரா மற்றும் தீபா மேத்தாவுடன் இணைந்து 'டூத்லென்ஸ்' (Toothlens) நிறுவனத்தை துவக்கினார். டெலாவேர் மற்றும் சென்னையைச் சேர்ந்த இந்நிறுவனம், ஏஐ துணை கொண்டு பல் சிகிச்சை செலவுகளை குறைப்பதோடு, பல்சிகிச்சை காப்பீட்டை பரவலாக்கும் நோக்கம் கொண்டது.
ஸ்மார்ட் போன் மற்றும் இண்டா ஓரல் காமிரா படங்களுடன், ஏஐ அலசல் கொண்டு, பற்குழிகள், ஈறு பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளை முன்னதாக கண்டறிந்து, மெய்நிகர் ஆலோசனை அளிக்க இந்த மேடை உதவுகிறது.
கூட்டு முயற்சி
தென்னிந்தியா முழுவதும் Dr.Smilez பல் மருத்துவமனை குழுமத்தை உருவாக்கி வளர்த்தெடுத்த அனுபவம் கொண்ட ராஜன், பல் மருத்துவ சிகிச்சையாளர்களின் சவால்கள், வரம்புகளை நன்கறிந்திருந்தார்.
“ஆதித்யா மற்றும் தீப், பிரச்சனையை தரவுகள் மற்றும் உள்கட்டமைப்பு சவாலாக நோக்கும் அணுகுமுறையை கொண்டு வந்தனர். நோயாளிகளின் நோய்க்கூறு ஆய்வுகளை டிஜிட்டல்மயமாக்கி நோயாளிகள் ஆவணங்களை முறைப்படுத்தினால், கண்டறிதலோடு, பல் சிகிச்சையை காப்பீடு சாத்தியம் கொண்டதாக மாற்றலாம் என உணர்ந்தோம்,” என்கிறார் டாக்டர்.ராஜன்.
இணை நிறுவனரும், சி,டி.ஓ. ஆன ஆண்ட்ரா, இயந்திர கற்றல் மற்றும் ரிஸ்க் மாடலிங்கில் அனுபவம் மிக்கவர். மூன்றாவது இணை நிறுவனர் மேத்தா, கம்ப்யூட்டர் விஷன் உள்ளிட்டவற்றில் அனுபவம் மிக்க ஏஐ பொறியாளர்.
2023ல் இவர்கள் மூவரும் இணைந்து, ஸ்மார்ட் போன் படங்கள் வாயிலாக பல் பிரச்சனைகளை கண்டறியக்கூடிய ஏஐ அல்கோரிதமை உருவாக்கும் பணியைத்துவக்கினர். அடுத்த ஆறு மாதங்களில் 5 லட்சம் படங்கள் கொண்டு பயிற்சி அளித்தனர். டாக்டர்.ராஜனின் டிஜிட்டல்மயமாக்கப்பட்ட 40 மையங்களில் இருந்து பெரும்பாலும் படங்கள் பெறப்பட்டன.
2024 துவக்கத்தில், 97 சதவீத துல்லியம் விகிதம் கொண்டு முதல் சேவையை அறிமுகம் செய்தனர். சான்றிதழ் பெற்ற சிகிச்சையாளருக்கு நிகராக கண்டறியும் திறன் கொண்டிருந்தது.
சுகாதார சீராய்வுக்கான ஸ்மார்ட் செக் மற்றும் வொயிட்னின், அலைனர் போன்றவற்றை முன்னோட்டமாக காண உதவும் ஸ்மைல் சிமுலேஷன் உள்ளிட்ட சேவைகளையும் நிறுவனம் சந்தா அடிப்படையில் கொண்டுள்ளது.
“அழகியல் நோக்கில் சேவை அளிக்க வரவில்லை. முன்னதாக கண்டறிந்து தடுப்பதில் தான் கவனம் செலுத்துகிறோம்,“ என்கிறார் டாக்டர்.ராஜன்.
டிஜிட்டல் காப்பீடு
வெளிப்புற நோயாளிகளுக்கான டிஜிட்டல் காப்பீடு பல் சிகிச்சையில் இல்லாமல் இருக்கும் இடைவெளியை டூத்லென்ஸ் கண்டறிந்தது.
“மருத்தவ சிகிச்சையில் காப்பீடு பாதுகாப்பு இருக்கிறது. ஆனால், பல் சிகிச்சையில் என்ன நிலை? பல் நலனை காப்பது என்பது ஒரு தேர்வு என நினைப்பதை இயல்பாக்கி விட்டோம்,” என்கிறார் டாக்டர்.ராஜன்.
இந்திய பல் சிகிச்சை நலன் தொடர்பான Insigh10 ஆய்வின் படி, இந்தியாவின் ஒரு சதவீத மக்களை மட்டும் சென்றடையும் நிலையில் பல் சிகிச்சை செலவு மிக்கதாகவும், நெருக்கடி ஏற்படும் வரை தள்ளிப்போடுவதாகவும் உள்ளது.
“நூற்றுக்கணக்கான மக்களிடம் பேசியதில் ஒரு விஷயத்தை உணர்கிறோம். இவர்கள் 500 ரூபாய் பரிசோதனையை தள்ளிப்போட்டு, பின்னர் 15,000 ரூபாய் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்,” என்கிறார் டாக்டர்.ராஜன்.
இந்த இடைவெளியை போக்க, டூத்லென்ஸ், ஸ்டார் ஹெல்த் மற்றும் விஸா புரோக்கிங்குடன் இணைந்து, ஒபிடி காப்பீட்டை அறிமுகம் செய்துள்ளது. ரூட் கெனால், கிரவுன் உள்ளிட்ட ஆரம்ப, மேம்பட்ட பல் சிகிச்சை இதன் கீழ் வருகிறது. ரூ.1,300 முதல் 7000 வரையான பிரிமியத்தில் ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சிகிச்சை கவரேஜ் பெறலாம். அழகு சார்ந்த சிகிச்சை இதில் வராது.
“வழக்கமான டிஜிட்டல் காப்பீடு இந்தியாவில் இல்லை. உலக அளவில் கூட, காப்பீடு கோரிக்கை சிக்கலானது. நாங்கள் எளிய நடைமுறையை விரும்பினோம். உங்கள் நிலை டூத்லென்ஸ் ஏஐ மூலம் தெளிவாகி, வலைப்பின்னல் உள்ள கிளினிக்கில் இருந்தால் உடனே அனுமதி கிடைக்கும்,” என்கிறார்.
வர்த்தக மாதிரி, வளர்ச்சி
டூத்லென்ஸ்; வர்த்தம்- நுகர்வோர் அணுகுமுறையை பின்பற்றுகிறது. இதில் நோயாளிகள், சோதனை, தடுப்பு சாதனங்கள், காப்பீடு சார்ந்த சிகிச்சையை செயலி மூலம் அணுகலாம். மேலும், பி2பி செயல்முறையில், நிறுவனம் கிளினிக்குகளுக்கு சந்தா அடிப்படையிலான சேவை அளிக்கிறது. மாதம் 150 டாலருக்கு ஏஐ ஸ்கேன் மற்றும் இதர சேவைகள் கிடைக்கும்.
15 பேர் குழு கொண்ட டூத்லென்ஸ், ஆறு மாதங்களில் 15,000 ஏஐ சார்ந்த சோதனை உள்பட 2 லட்சம் பல் சோதனைகளை அளித்துள்ளது. மும்பை, தில்லி, பெங்களூரு, இந்தூர், கோழிக்கோடு நகரங்களில் 300க்கும் மேற்பட்ட கிளினிக்கை தனது மேடையில் கொண்டுள்ளது.
டெண்டலு, டெலி டெண்டிஸ்ட்ஸ் போன்ற மேடைகளுடன் இணைந்து அமெரிக்காவில் 500 கிளினிக்கில் விரிவாக்கம் செய்துள்ளது. நோயாளி சிகிச்சை காலத்தை 40 சதவீதம் குறைத்து காப்பீடு ஏற்பை 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிறுவனம் தெரிவிக்கிறது.
“என் நிறுவனம் மூலம் பதிவு செய்த பிறகு, இந்த செயலி மூலம் பல் செல்பி எடுத்துக்கொண்டேன். ஆரம்ப ஈறு பாதிப்பை கண்டறிந்து, ஒரு கிளினிக்கில் பரிந்துரைத்தது. கிளினிக் சென்ற போது எனது காப்பீடு சரிபார்க்கப்பட்டு சிகிச்சை ஏற்கப்பட்டது. நான் ஒரு ரூபாய் கூட செலவிடவில்லை...” என்று தனது அனுபவத்தை பிரியா சர்மா எனும் பயனாளி பகிர்கிறார்.

வளர்ச்சி திட்டம்
2023ல் டூத்லென்ஸ் நிறுவனம் விதைக்கு முந்தைய சுற்றில், சிங்கப்பூர் ஏஞ்சல் முதலீட்டாளரிடம் இருந்து 225,000 டாலர் திரட்டியது. தற்போது விரிவாக்கத்திற்காக மேலும் 5 லட்சம் திரட்ட திட்டமிட்டுள்ளது. மேலும், 3,000 இடங்களில் கிளினிக் வலையை விரிவாக்க, மூன்று புதிய காப்பீடு பார்ட்னர்களை கொண்டு வர, 2025ல் ஒரு லட்சம் பாலிசிகளை அளிக்க இந்த நிதி உதவும். அடுத்த ஆண்டு 3 லட்சம் பாலிசிகளை இலக்காக கொண்டுள்ளது.
மேலும், 2026ல் 89 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டவும் திட்டமிட்டுள்ளது. காப்பீடு பாலிசி சராசரியாக 20 டாலராக இருப்பதால், இந்த சேவை பரவலாக ஏற்கப்படும், என்கிறார் டாக்டர்.ராஜன்.
“பல் சிகிச்சையை பரவலாக்க வேண்டும் என்பது எங்கள் இலக்கு. 2030ல் இந்தியாவின் 25 சதவீத காப்பீடு மக்கள் தொகை பல் காப்பீடு பெற்றிருக்க வேண்டும்,” என்கிறார்.
”உலக அளவில் இந்தோனேசியா மற்றும் வியட்னாமில் முன்னோட்ட திட்டங்கள் கொண்டுள்ளது. மேலும், அமெரிக்க சந்தையை ஆய்வு செய்து வருகிறது. உள்ளூரில் நிறுவனங்கள் மூலம் நல்ல பலன் கண்டு வருகிறது. 4-5 நிறுவனங்கள் டூத்லென்ஸ் மூலம் பல் காப்பீடு அளிக்கிறது.
எதிர்கால திட்டம்
இதே பரப்பில் டெண்டல் டயக்னாஸ்டிக்ஸ், ஸ்மைல் ஏஐ போன்ற போட்டி நிறுவனங்கள் இருந்தாலும், டூத்லென்ஸ் பரிசோதனை, கிளினிக், காப்பீடு என எல்லாவற்றையும் நிகழ் நேர ஒருங்கிணைப்பில் வழங்குகிறது.
இந்தியாவின் வேறுபட்ட பல் அமைப்பிற்கு ஏற்ப செயல்படுவதில் துவக்கத்தில் சில சவால்களை இதன் ஏஐ மாதிரி எதிர்கொண்டது. ஆனால் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், பல் சிகிச்சை சார்ந்த காப்பீடுகள் அறிமுகம் செய்ய மற்றும், விழிப்புணர்வு உண்டாக்க, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்துடன் பேசி வருகிறோம், என்கிறார்.
ஆங்கிலத்தில்: பூஜா மாலிக், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan